Monday, August 12, 2019

தூங்க முடியாத தாலாட்டு

தூங்க முடியாத தாலாட்டு
நேற்றிரவின்
அமைதியில் ....
ஊர்த்திருவிழா மேடையில்..
இருவர் வந்து
இசைத்தது வயலினையா?
வசந்தத்தையா?

ஒரு வயலினை
வாசிப்பதில் இத்தனை வசியங்களா

அந்த வயலினின்
ஐந்து கம்பிகளும் அமைதியாகத்
துயில் கொண்டிருந்தன பையில்
கட்டி வைத்த பொழுது!
ஓ...கலைஞனே!
உன் கை விரல்களின் ஸ்பரிசத்தில்
இத்தனை ராகங்களை இசைக்கின்றதே...
என் செவிகளையே இனிக்கச் செய்கிறதே என்ன விஷயம்
உனக்கு
நீ அமர்ந்திருக்கும் மேடையின் நான்கு
விளிம்புகள் மட்டுமே எல்லை என்று
நினைத்திருந்தேன்... ஓ...கலைஞனே
நீ
எப்படி அதைத் தாண்டி வந்து
எங்கள் இதய பிரதேசங்களை எல்லாம் உன் எல்லையாக்குவதற்கு வெல்கிறாய்...

உன்
இசைச் சாம்ராஜ்யத்திற்கு
எல்லையே இருக்க முடியாது
எத்தனை வேலிகள்
வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடிக்கும்
அதிசய சக்தி
உன் விரல்களில்
உள்ளது

இங்குள்ள
காற்றுத்துளிகள்
வெகு நாட்களுக்குப் பிறகு தேன் மழையில்
நனைந்திருக்கிறது....

நனைந்ததால்
அனைவரது செவிகளையும்
இனிக்கச் செய்கிறது...
அன்று
ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன்
பிடில் வாசித்தானாம்... இன்று நீங்கள் வாசிக்கிறீர்கள்...
எரிவது ரோமாபுரி அல்ல
எங்கள் உள்ளங்கள்....
நீங்கள்
எங்களுடன் பேசுவதற்கு
எந்த மொழியையும் அறிந்திருக்க
அவசியமில்லை
இசை ஒன்றே போதும்

இந்த இரவில் தாலாட்டுப்பாட்டு
நீங்கள் இசைக்கிறீர்கள்...
ஆனால்
எங்களால்
உறங்க முடியவில்லை...
உறங்கி விட்டால்
உங்கள் பாடல்களை ரசிக்க முடியாதே..
அதனால்
இங்கு மட்டும் தான்
நீங்கள் தோல்வி அடைகிறீர்கள்...

காதல் தோல்வியை போல் இந்த தோல்வியையும் வரலாறு ஏற்றுக்கொள்ளும். வயலினில் ராகம் வாசித்தால்
மழை பொழியுமாம்.
இன்று மழை பொழியுமா
என்னவோ தெரியவில்லை
எங்கள்
இதயங்களில் தேன்மழை..

என் மனதை
வசியம் செய்த
இசையை இசைத்த
உங்களுக்கு
உதட்டளவிலும்
உள்ளத்தளவிலும் நன்றி👏

Friday, March 23, 2018

தெய்வ தரிசனம்
காலையில் நாலு மணிக்கே எழுந்து
கோவிலுக்கு சென்று
சிறப்பு தரிசனம் டிக்கெட் எடுத்து...
எனக்கு முன்னமே
வரிசையில் நிற்பவர்களின் பின்னால்
நானும் இணைந்தேன்...
மூன்று மணி நேர
நகர்விற்குப் பின்
சன்னிதியில் போய்ச் சேர்ந்தோம்...
சன்னிதியில் தெய்வம் இல்லை!
அர்ச்சகர்களின் அதிகார
துஷ்ப்ரயோகமும்
பக்தர்களின் தாங்க முடியாத
கேட்கக்கூடாத
சப்தங்களின் இரைச்சலும்
தெய்வத்தைத்தான் துரத்தி விட்டனவோ
என்னவோ?